Thursday, February 5, 2015

மனமது மாசுபட்டால்

நாம் சென்ற வாரம் 4 ம் பாவத்தை அறிந்துகொள்ள முயன்றோம். ஒவ்வொரு பாவத்துக்கும் பல விதமான பரிமாணங்கள் உண்டு. வகுப்பில் கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலும் கிடைத்த நேரத்துக்கு மதிப்பளிக்கும் வகையிலும் சில பல பரிமாணங்களை உங்களுக்கு அடையாளம் காட்ட முடிந்தாலும் இதைச் சொல்லியிருக்கலாமே, அதைச் சொல்லியிருக்கலாமே என்றுதான் மனம் குற்றம் சாட்டுகின்றது. அந்த நேரத்தில் என்ன கொடுக்கப்பட்டதோ அதை பரிமாறிவிட்டேன் என்று திருப்திப்பட்டாலும் 4 ம் பாவத்தின் முக்கிய கதாநாயகனானமனம்சமாதானம் அடைய மறுக்கிறது.
மனம் மிகவும் பலம் வாய்ந்தது. அது 4 க்கு மட்டுமல்ல 3, 5 ஆகிய பாவங்களுக்கும் கதாநாயகன்தான். என்னைப் பற்றி நீ முழுமையாகப் பேசினாயா என்று அது கேட்கும் கேள்விக்கு பதிலாகத்தான் இந்தக் கட்டுரை. பொறுமையாகப் படியுங்கள். நாம் இந்தக் கட்டுரையில் மனோகாரகனான சந்திரனுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் அதன் முக்கிய விளைவான மனப்பிளவு, மன அழுத்தம் ஆகியவற்றினால் ஒரு ஜாதகரின் நடத்தையில் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் அறிந்துகொள்ள முயலுவோம். இது 6 ம் பாவத்துடனும் தொடர்பு கொண்டதுதான்.
சமீபத்தில் நிகழ்ந்த கிரஹணத்தின் பாதிப்பு இன்னும் என்னை விட்டு அகலவில்லை போலும்.
போதும் இந்த தன்னிலை விளக்கம் என்று கருதுகிறேன்.
ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்படுவது மிகவும் இயல்பானதுதான். அதன் ஆழத்தை அல்லது பாதிப்பை நாம் ஜோதிடத்தின் துணை கொண்டு அறிந்து கொள்வது எத்தனையோ விதத்தில் உதவலாம் அல்லவா? ஒரு சிறுவனுக்கோ அல்லது சிறுமிக்கோ அது ஏற்படும் என்பதைக் கண்டுகொண்டால் அவர்களை எப்படி வழி நடத்தலாம் என்பது தெரியும் அல்லவா? திருமணப் பொருத்தம் பார்க்கும்போது ஒருவருக்கு மனம் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தால் அடுத்தவர் அடையும் பாதிப்பிலிருந்து அவரைக் காப்பாற்றலாம் அல்லவா? (அட! 7 ம் பாவத்துக்கும் ஒரு தொடர்பு இக்கட்டுரை ஏற்படுத்துகிறது அல்லவா?)
மனப்பிளவு, மன அழுத்தம் பலவகைப் படும். சிலர் எப்பொழுதும் தனித்திருப்பதையே விரும்புவார்கள். அடுத்தவர் அவரது தனித்தன்மையை பாதிப்பதாக உணருவார்கள். தன்னுடைய சோகத்தை, சந்தோஷத்தை அடுத்தவரிடம் பகிர்ந்து கொள்ள விரும்பமாட்டார்கள். சிலர் சிறிய பாதிப்புகளைக் கூட தாங்க மாட்டார்கள். அவர்களைத் தொட்டாச்சிணுங்கி என்று அழைப்பார்கள். சிலர் திரைபடம் அல்லது கதைகளில் விவரிக்கப்படும் நிகழ்ச்சிகளுக்கு அதிகம் உணர்ச்சிவயப் படுவார்கள். சிலர் ஒரு பூச்சி தன்னைக் கடிக்கும் என்கிற பயத்தில் அந்தப் பூச்சியை அடிப்பார்கள். அது இறந்து விட்டது என்று தெரிந்த பின்னாலும் அதை அடித்துக் கொண்டிருப்பார்கள். சிலர் தான் போகும் வழியில் ஒரு நாயோ அல்லது மாடோ தென்பட்டால் மிரண்டு வேகமாக நகருவார்கள் அல்லது ஓட முயற்சிப்பார்கள். சிலருக்கு தனியாக இருக்க பயம்; அப்படி இருக்க வேண்டிய கட்டாயம் வந்தால் டிவியின் சப்தத்தை அதிகப் படுத்தி வைத்துக் கொள்வார்கள். சிலருக்கு கோவிலில் நடக்கும் நிகழ்ச்சிகளில் சாமியாடும் நிலை ஏற்படும். சிலர் யோக குருக்களின் சந்நிதியில் தன்னை மறந்து ஆடுவார்கள். சிலருக்கு தன்னை அறியாமல் மலம் மூத்திரம் வெளியேரும். வெளியாட்களிடம் சஹஜமாகப் பழகும் சிலர் தன் சொந்தங்களிடம் முரட்டுத்தனமாகப் பழகுவர். சிலருக்கு சில நேரங்களில் தான் என்ன செய்கிறோம் என்று அறியாமல் சில தவறுகளைச் செய்வர். சிலருக்கு தனக்கு என்ன வேண்டும் என்பதே தெரியாது. சிலர் குறிப்பிட்ட வயது வரை நன்றாகப் பழகுவார்கள். திடீரென அவர்கள் பழக்கத்தில் மாறுதல் ஏற்படும். நன்றாகப் படிக்கும் மாணவன் திடீரென படிப்பை ஒதுக்குவான். பெற்றோர்களுக்கு ஒத்துழைப்பு தரமாட்டான். இப்படி எத்தனையோ விதமான நடத்தைகள் மருத்துவர்களால் மன அழுத்தம் என்று அடையாளம் காட்டப்படுகின்றன. [மன விகாரம் வேறு; மன அழுத்தம் வேறு]
அப்படி மன அழ்த்தத்தினால் ஏற்படும் பாதிப்பை உணர்ந்த பின்னர்தான் ஒருவரை மருத்துவரிடம் அழைத்துச் செல்வோம். ஆனால் ஜோதிட சாஸ்திரத்தைப் பயன்படுத்தி ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்படுமா, அது எந்த அளவில் இருக்கும், எப்பொழுது அது தன் பாதிப்பை வெளிப்படுத்தும் என்றெல்லாம் நம்மால் அவர் பிறந்த விபரம் தெரிந்தவுடனேயே மிகவும் தெளிவாக கண்டுபிடிக்க முடியும்.
இப்படிப்பட்ட மன அழுத்தம் அல்லது மனப்பிளவை ஆங்கிலத்தில் SCHIZOPHRENIA  என்று அழைக்கின்றனர். உலக மக்கள் தொகையில் உத்தேசமாக 1% க்கு மேல் மக்கள் இந்த நோயால்நாம் இதை இந்த நிலையால் என்று சொல்வோமே - பாதிக்கப்படுகின்றனர். இந்த பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டால் அது ஒருவரை மன நோயாளியாக அடையாளம் காட்டுகிறது.
இது ஜாதகரின் தனிப்பண்பினை ஒழுங்கற்றதாக மாற்றி  ( PERSONALITY GETS SERIOUSLY DISORGANISED)  அவரால் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் செய்கிறது. இது அவரின் நடத்தையில் வேறுபாட்டை ஏற்படுத்துகிறது. அதே சமயம் அவரது புத்தி இயல்பாக செயல்படுகிறது. இந்த நிலையினால் சிலர் அடுத்தவரை பாதிக்கின்றனர். சிலர் தன்னைத்தானே பாதித்துக் கொள்கின்றனர். இதற்கு முறையான மருத்துவத் தீர்ப்பு முழுமையாக இருப்பதாகத் தெரியவில்லை. அவரது உணர்வுகள் அதிகமாகாமல் கட்டுக்குள் வைத்திருக்கும் மருந்துகள்தான் இதற்கு ஒரு தீர்ப்பாக இருப்பதாக அறிகின்றோம்.
இப்படி ஒரு ஜாதகர் பிறந்தால் என்ன பரிஹாரம் செய்ய வேண்டும் என்பதை பராசர மஹரிஷி நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார். ஆனால் இன்றைய சமுதாய சூழ்நிலையில் தனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை என சொல்லி மருத்துவர் கொடுக்கும் மருந்தையே பலரும் நாடுகிறார்கள்.
சரி, நம் முதலில் இப்படிப்பட்ட நிலை ஏற்படும் விதத்தை அறிந்து கொள்ள முயலுவோம்.
மனம் எனப்படுவது சந்திரனால் ஆளப்படுகிறது. 4 ம் பாவமும் 5 ம் பாவமும் ஒருவரது மனத்தை துல்லியமாக படம் பிடித்து காட்டுகின்றன. மனத்தில் ஏற்படும் பாதிப்பு சில நேரம் மூளையையும் பாதிக்கிறது. மூளை 2 ம் பாவத்தால் அறியப்படுகிறது. மூளை புத்திகாரகனான புதனால் ஆளப்படுகிறது. மனதை பாதிக்கும் கிரகங்கள் ராகு, கேது. மனோகாரகனான சந்திரனை கிரஹணம் என்கிற நிலையில் இவர்கள் பி(பீ)டித்துக் கொள்கிறார்கள். கிரஹணம் எப்பவோ ஏற்படும் நிலை. ஆனால் ஒருவரது ஜாதகத்தில் சந்திரனுடன் ராகு கேதுக்கள் சேர்ந்து அமருவது என்பது மிகவும் இயல்பான ஒன்று. இவர்களோடு சனி செவ்வாய் போன்ற கிரகங்கள் சேரும்போது அது பாதிப்பை இன்னும் நுண்ணியமாக்குகிறது அல்லவா? இவர்கள் விளையாடும் விளையாட்டு 6, 8, 12 போன்ற ஆடுகளங்களில் (UNEXPECTED EXTRA BOUNCE) அமையலாம் அல்லவா? இவற்றோடு 4 ம் பாவம், 5 ம் பாவம் ஆகியவைகளில் ஏதேனும் ஒன்று பாதிக்கப்படலாம் அல்லவா? 6 ம், 8 ம் 12 ம் அதிபர்களில் யாரேனும் ஒருவர் அங்கு அமரலாம் அல்லது அந்த பாவத்தைப் பார்க்கலாம். அல்லது அந்த பாவாதிபதியோடு சேரலாம் அல்லது அவரைப் பார்க்கலாம். ஏன், சந்திரன் ராகு கேதுக்களின் நக்ஷத்திரங்களில் அமையலாம். இப்படிப்பட்ட அமைப்பு ராசியிலோ அல்லது நவாம்சத்திலோ ஏற்படலாம்.
நக்ஷத்திரங்களை தேவ கணம், மனுஷ்ய கணம், ராக்ஷச கணம் என்று மூன்று வகையாகப் பிரிக்கிறோம். இவற்றில் ராகுவின் நக்ஷத்திரங்கள் திருவாதிரை, ஸ்வாதி, சதயம். திருவாதிரை மனுஷ்ய கணம். ஸ்வாதி தேவ கணம். சதயம் ராக்ஷச கணம். கேதுவின் நக்ஷத்திரங்கள் அஸ்வினி தேவ கணம்; மகம் & மூலம் ராக்ஷச கணம்;
இந்த நக்ஷத்திரங்களில் சந்திரன் அமர்ந்து அதற்கு ராகு கேது சனி செவ்வாயுடன் 6, 8, 12 ம் பாவத்துடன் தொடர்புள்ள மற்ற கிரகங்களின் பாதிப்பு ஏற்படும்போது மன நிலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவற்றில் ராக்ஷச கணம் உள்ள நக்ஷத்திரங்கள் அதிக பாதிப்பையும், மனுஷ்ய கணம் உள்ள நக்ஷத்திரங்கள் அதைவிட குறைந்த பாதிப்பையும், தேவ கணத்தில் உள்ள நக்ஷத்திரங்கள் அதையும் விட குறைந்த பாதிப்பையும் ஏற்படுத்துகின்றன.
ராக்ஷச கணம் உள்ள நக்ஷத்திரங்கள் பாதிப்படையும்போது, ஜாதகர் எப்பொழுதும் மன அழுத்தம் மிக்கவராக செயல் படுவதால் அவருடன் சேர்ந்து வாழ்வது ஒருவருக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும். அவர்களின் எதிபார்ப்பும், கட்டளையிடும் குணமும் துன்பத்தை ஏற்படுத்தும். அவர்கள் தாழ்வு மனப்பான்மை உடையவர்களாகவும் அதனால் தான் எதை நம்புகிறாரோ அதுவே சரி என்று கருதி மற்றவர்களைவிட தான் உயர்ந்தவன் என்று நிரூபிக்கும் வகையில் நடந்து கொள்வார்கள்.
ராகு கேதுவால் சந்திரன் அதிக அளவில் பாதிக்கப்படும்போது அவர்கள் அடுத்தவர்கள் தன்னை ஏமாற்றுவார்கள் என்கிற மன நிலையைக் கொள்வார்கள். அங்கு 6, 8, 12 போன்ற தீயஸ்தானங்களின் அதிபர்களாக இருந்து பாதிக்கப்பட்ட மற்ற கிரகங்களின் தொடர்பு அவர்களை பல வழிகளில் பாதிக்கும்.
அப்படிப்பட்ட நிலையில் பாதிக்கும் கிரகமாக குரு இருப்பின் அவர்கள் அறிவற்றவர்களாகவும், புகழை அடைய முடியாதவர்களாகவும், ஆன்மீக சிந்தனையிலிருந்து விலகியும் இருப்பார்கள்.
சனி அவரை அதிக அளவில் பொறாமை கொள்பவராகவும், சின்னத்தனம் என்று சொல்லப்படும் குறுகிய மனப்பான்மையுடன் கூடியவராகவும், தனக்கு வரும் துன்பங்கள் அடுத்தவருக்கும் வரவேண்டும் என்று எண்ணுபவர்களாகவும் மாற்றும்.
செவ்வாய் அவரை பேராசை பிடித்தவராகவும், அடுத்தவரை பழி வாங்குபவராகவும், தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்வதில் அவசரம் காட்டுபவராகவும், அதிகம் கோபப்படுபவராகவும் ஆக்கும்.
சுக்கிரன் அவரை இல்லற சுகத்தில் ஏமாற்றம் கொள்ளச்செய்து அதற்கு மற்ரவரை காரணம் காட்டி தவறான அணுகுமுறையை ஏற்படுத்தி தோல்வி அடையச் செய்யும். அடுத்தவருடன் இயல்பாகப் பழகும் தன்மையை கெடுத்து விடுகிறது.
புதன் பயம், கோழைத்தனம் ஆகியவற்றை ஏற்படுத்தி அவரை கற்பனை உலகத்தில் வாழ வைத்து விடுகிறது. அதுமட்டுமின்றி அது அவரது மூளையின் செயல்பாட்டை கெடுத்து விடுகிறது.
இப்படிப்பட்ட பாதிப்பானது அவர்களது காதில் எப்பொழுதும் ஏதோ ஒரு சப்தம் கேட்டுக்கொன்றிருக்கிறது; ஏதோ ஒன்று பேசிக்கொண்டிருக்கிறது என்கிற நிலையில் அவரை மிகவும் பாதித்து அவருடன் கூட இருப்பவர்களையும் பாதிக்கிறது. 5 ம் பாவத்தில் சந்திரன் புதன் ஆகிய இருவரும் ராகு கேதுவால் பாதிக்கப்படும்போதும் இப்படிப்பட்ட நிலை உருவாகிறது. செவ்வாயின் தாக்கம் முரட்டுத்தனமான நிலைக்குத் தள்ளி அடுத்தவரை துன்புறுத்தும் நிலைக்குத் தள்ளுகிறது. சனியின் தாக்கம் தன்னைத் தானே வருத்தப்படுத்திக் கொள்ளும் நிலையை உருவாக்குகிறது.
இந்த மன நிலையைப் பற்றி மருத்துவர்களிடம் பேசும்பொழுது அவர்கள் இதற்கு காரணமாக சொல்லும் காரணங்கள் மூன்று.
1.    இது தலைமுறை நோயாக இருக்கலாம்.
2.    மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள்
3.    மூளை அமைப்பில் உள்ள அசாதாரணத்தன்மை.
இவற்றை ஜோதிடம் எப்படி உணருகிறது.
·         ஒரு ஜாதகத்தில் 5 ம் பாவம் பூர்வ ஜென்ம புண்ணியம் என்கிற நிலையைக் காட்டுகிறது. அவரது சஷ்டியாம்சம் அவரது பூர்வ வினையை அடையாளம் காட்டுகிறது. அவர் இந்த ஜென்மத்தில் எந்த தேவதையால் ஆளப்படுகிறார் – போன ஜென்ம வினையின் பயன் அது. அவரது அக்ஷவேதாம்சமும் காவேதாம்சமும் அவரது தந்தை வழி தாய் வழி மூதாதையர்களை அடையாளம் காட்டுகிறது. அவரது த்ரிம்சாம்சம் ஒரு நோய் அவரது கர்ம வினையின் பயனால் அவரை பாதிக்கிறதா என்பதை 3 அல்லது 8 ம் பாவத்தின் மூலம் அடையாளம் காட்டுகிறது. தலைமுறை நோயை இது அடையாளம் காட்டும்.
·         ராகு கேதுக்கள் ரசாயனத்தை ஆள்கிறார்கள். அவர்களுடைய தொடர்பு ரசாயன மாற்றத்தை குறிப்பிடும். 4 அல்லது 5 ம் பாவம், சந்திரன் புதன் ஆகியோருக்கு ராகுவினால் ஏற்படும் பாதிப்பு.
·         ராகு மூளையின் அசாதாரணத் தன்மையை அடையாளம் காட்டுகிறார். எந்த நிலையிலும் உள்ள அசாதாரணத்தன்மை ராகுவால் குறிப்பிடப்படுகிறது. அதிகப்படுத்துதல், எல்லை தாண்டுதல்இவை எல்லாம் ராகுவின் விளைவுகள். இப்படி ராகு கேதுவால் பாதிக்கப்பட்ட சந்திரன், புதன் ஆகியவற்றோடு கூடிய ஜாதகர்களின் மூளையின் பதிவுகள் ( SCANNED IMAGES) இதை நிரூபிக்கின்றன.
இப்படிப்பட்ட நிலைகளிலிருந்து விடுபட முடியுமா? முடியும்.
பாதிப்புக்கு உள்ளான இடத்தை ஒரு இயற்கை சுபர் பார்த்தால் அல்லது நல்ல பலமான நிலையில் சேர்ந்தால் இந்த பாதிப்பு அறவே ஏற்படாது. சந்திரன் அமர்ந்த ராசி அதிபதி பார்த்தாலும் அவர் தீயவராக இருந்தாலும் இந்த பாதிப்பு ஏற்படாது.
அதே சமயம் அந்த பாவத்துடன் பாதகாதிபதி, வக்ர நிலையில் உள்ள கிரகம் சேர்க்கை அல்லது பார்வை நிலையில் இருப்பின் இந்த நிலை மோசமாகும்.
ஆக இப்படிப்பட்ட மனப்பிளவு, மன அழுத்தம் போன்ற நிலைகள் ஏற்பட காரணமாக உள்ள நிலைகள்:

  1. சந்திரன் ராகு கேதுவுடன் சேர்ந்து இருந்து, லக்னத்துக்கு 4 அல்லது 5 ம் வீடும் ஏதோ ஒரு விதத்தில் ராகு கேதுக்களின் பாதிப்பு அடைந்து அல்லது சந்திரன் அமர்ந்த ராசி ராகு கேதுவின் பாதிப்பில் இருந்தால் மன நிலை மிகவும் மோசமாக பாதிப்படையும்.
  2. சந்திரன் அமர்ந்த நக்ஷத்திரம் ராகு கேதுக்களின் ஆட்சியில் இருக்கும் நக்ஷத்திரமாக அமைந்து, லக்னத்துக்கு 4 அல்லது 5 ம் வீடு அல்லது சந்திரன் அமர்ந்த ராசி ராகு கேதுக்களினால் ஏதோ ஒரு விதத்தில் பாதிபடைந்தால் மன நிலை மிகவும் மோசமாக பாதிப்படையும்.
  3. இரண்டாவது பகுதியில் சொன்ன நிலைக்கு சந்திரன் ராகு கேதுக்களின் நக்ஷத்திரதில் இருந்து மேலும் ராகு கேதுக்களுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும் மன நிலை மோசமாக பாதிப்படையும்.
  4. லக்னம் அல்லது வலுவற்ற லக்னாதிபதி ராகு கேதுவினால் பாதிப்படைந்து 4 அல்லது 5 ம் வீடு ராகு கேதுக்களினால் பாதிக்கப்பட்டால் மன நிலை ஓரளவுக்கு பாதிப்படையும்.
  5. மேலே சொன்ன நிலைகளில் மற்ற கிரகங்கள் தீய பாதிப்புடன் சேரும்போது மன நிலையில் பாதிப்பு கிரகங்களுக்கு தகுந்தாற்போல் பாதிப்படையும்.
  6. ஆனால் சந்திரன் அமர்ந்த ராசியின் அதிபர் தீயவராக இருப்பினும் அவரது பார்வை மன நிலை பாதிப்பை சரி செய்யும். சுபர்களின் பார்வையும் சேர்க்கையும், யோககாரகனின் பார்வை அல்லது சேர்க்கையும் பாதிப்பு ஏற்படாமல் காப்பாற்றும். சனியாக இருப்பின் அவரது 3 & 10 ம் பார்வையும், செவ்வாயாக இருப்பின் அவரது 4 & 8 ம் பார்வையும் உதவும். சந்திரன் அமர்ந்த ராசிக்கு அதிபதியாகி அவர்களது 7 ம் பார்வை உதவாது. ஏனெனில் அப்பொழுது அவர்கள் ராகு கேதுவுடன் சேர்க்கை பெற்றுவிடுவார்கள் அல்லவா?

5 comments:

  1. Plpost this in english language... Thanks

    ReplyDelete
  2. nobody can explain as interesting as this. I appreciate your time and effort on making things simple and easily understandable Best astrology in bangalore | Best astrologer in bangalore

    ReplyDelete
  3. Thanks for sharing this informative blog..Keep posting
    Please look here at
    Black Magic Astrologer in Padmanabha Nagar

    ReplyDelete
  4. Its a very useful blog,thank you for sharing this post with us,keep posting like useful blogs.
    For best indian astrology services contact us Best Astrologer in Dollars Colony

    ReplyDelete